மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கும் அரசாங்கம் வடக்கு மாகாண சபைக்கு நிழல் அரசாங்கத்தை உருவாக்கி அதன் அமைச்சர்களாக ஸ்ரீபவானந்த ராஜா, ஜெகதீஸ்வரன், ரஜீவன், இளங்குமரன், திலகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பிமல் ரத்நாயக்க இறுதியாக யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தபோது அவரால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கமையவே இந்த நிழல் அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இது முதுகெலும்பு இல்லாத கேவலமான வேலை’’ என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் விசனம் வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நீதித்துறை திருத்தச் சட்டமூலம் மற்றும் நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘‘கடந்த 10ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் மாகாண சுகாதார அமைச்சின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராஜா அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இறுதியாக யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தபோது அவரால் கட்டளையொன்று இடப்பட்டுள்ளது. அதாவது நிழல் அமைச்சர்களை நியமித்து ஆளுநர் அவர்களை அழைத்து பேச வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.

இதன்படி, சுகாதாரத்துக்கு ஸ்ரீபவானந்த ராஜாவும் கல்விக்கு ஜெகதீஸ்வரனும் மகளிர் விவகாரத்துக்கு ரஜீவனும் உள்ளூராட்சி சபைகளுக்கு இளங்குமரனும் விவசாயம், கால்நடைகளுக்கு திலகநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண சபை இல்லாத நிலையில் அங்கு கூட்டமொன்று நடைபெறுகின்றதென்றால் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும். அதனை விடுத்து எப்படி ஸ்ரீபவானந்த ராஜாவை மாத்திரம் அழைக்க முடியும்?

இந்த அரசாங்கம் ஒரு புறம் மாகாண சபைகள் தேர்தலை நடத்தாமல் இருப்பதுடன் இன்னுமொரு பக்கத்தில் எவ்வித ஜனநாயகத்துக்கும் இடமளிக்காமல் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் பிரஜாசக்தி போன்று தங்களின் உறுப்பினர்களை மாகாண சபைகளுக்குள் நுழைக்கின்றனர். இது முதுகெலும்பு இல்லாத கேவலமான வேலை.

தாங்கள் மாகாண சபைகளுக்கு எதிரானவர்கள் போன்று உலகத்துக்கு காட்டிக்கொண்டு மாகாண சபைகளுக்குள் தங்களுடைய முகவர்களை நியமிப்பதையே செய்கின்றனர்.

இதேவேளை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட நிமலன் என்ற தமிழ் அரசியல் கைதியொருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கின்றார். அவருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் சிறை அதிகாரிகளே கொழும்புக்கு வெளியில் தூர இடங்களுக்கு அவரை வழக்குகளுக்காக கொண்டு சென்று மீண்டும் கொழும்புக்கே அழைத்து வருவர்.

ஆனால், இப்போது புதிய அதிகாரியொருவர் கடந்த 06 வருடங்களுக்கு மேலாக இருந்த நடைமுறையை இல்லாமல் செய்து அவரை அந்தந்த இடங்களில் தங்க வைத்து தேவைப்பட்டாலே கொழும்புக்கு அழைத்து வருகின்றார். இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று மொரிஸ் என்ற கைதியொருவர் இருக்கின்றார். சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட வாக்குமூலம் என்று தெரிந்தும் ஒரு வழக்கில் அவர் விடுதலை செய்யப்படும்போது உடனடியாக அவருக்கு எதிராக வேறு வழக்கை போடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்’’ என்றார்.

author avatar
Selvarajah

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here