‘வடக்கின் பெரும் போர்’ கிரிக்கெட்போட்டியில் யாழ். மத்திய கல்லூரி வெற்றிபெற்றது

படங்கள் ஐசிவசாந்தன்

யாழ் மத்திய கல்லூரியும் சென்ஜோன்ஸ் கல்லூரியும் இடையில் 119வது ஆண்டாக நடைபெற்ற வடக்கின் போர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.

யாழ்.மத்திய கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான போட்டி மூன்றாவது நாளாக இன்றைய தினம் சனிக்கிழமையும் இடம்பெற்றது. அதில் மூன்று இலக்குகளால் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.

விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில், யாழ்.மத்திய கல்லூரி அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய பரியோவான் கல்லூரி அணி 119 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. மத்திய கல்லூரி சார்பாக கணேசமூர்த்தி கௌசிகன் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி மிரட்டினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த மத்திய கல்லூரி அணி 95 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இருப்பினும், இரண்டாம் இன்னிங்ஸில் ஆட்டம் சூடுபிடித்தது. பரியோவான் கல்லூரி சார்பாக உதயனன் அபிஜாய்சந்த் சதம் விளாசி அசத்த, அந்த அணி 223 ஓட்டங்களைக் குவித்தது.

ஆனால், மத்திய கல்லூரியின் பந்துவீச்சாளர் முரளி திசோன் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை நோக்கித் துணிச்சலாக விளையாடிய யாழ்.மத்திய கல்லூரி அணி, வெற்றியைத் தன்வசமாக்கியது.

இந்த வெற்றியின் மூலம், இதுவரை நடைபெற்ற 119 போட்டிகளில் யாழ் மத்திய கல்லூரி தனது 30ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இருந்தபோதிலும், 40 வெற்றிகளுடன் பரியோவான் கல்லூரி இப்போதும் வரலாற்றுப் பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

எஞ்சிய 41 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்ததுடன், 8 போட்டிகள் முடிவுகள் ஏதுமின்றி கைவிடப்பட்டுள்ளன.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் மைதானத்தில் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான 23ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை பரியோவான் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles