தாய்லாந்தில் நடைபெற்று வரும் தண்ணீர் திருவிழாவின்போது வீதி விபத்துகளில் சிக்கி 6 நாளில் 216 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டு மக்களின் புத்தாண்டு சோங்க்ரான் என்று அழைக்கப்படுகிறது. தாயலாந்து தேசிய புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 9ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
சோங்க்ரான் என்ற சொல் இந்தியாவின் சங்கராந்தி என்ற வார்த்தையுடன் ஒத்துப்போகிறது. தெற்காசியாவின் பல இன மக்களிடையே புத்தாண்டு இந்த சமயத்தில்தான் கொண்டாடப்படுகிறது.
சோங்க்ரான் மத சடங்குகள், பாரம்பரிய நடனங்கள், இசை மற்றும் விருந்துகளுடன் கொண்டாடப்படுகின்றன.
சோங்க்ரான் நீர் திருவிழாவின்போது, பழையன கழித்து விட்டு, புதியதை வரவேற்கும் அடையாளமாக மக்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைத் தெளித்துக் கொள்கிறார்கள்.
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களைப் போலவே, தாய்லாந்து மக்கள் சோங்க்ரான் திருவிழாவின்போது கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர்.
இந்நிலையில் இந்தத் திருவிழா கடந்த 13ஆம் திகதி தொடங்கியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தத் தண்ணீர் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பங்கேற்க வரும்போது 6 நாளில் சுமார் 1,108 வீதி விபத்துகள் நடந்துள்ளன. இதில் 216 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,073 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
