
“எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய புனிதமான மரபு.
எமது வரலாற்று நாயகர்களின் தியாகத் தடங்களை இளைய தலைமுறையிடம் சேர்ப்பது எமது தார்மீகக் கடமையாகும் ”
இன்று சனிக்கிழமை மலரும் புதுயுகம் அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தியாகத்தாய் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
கடந்த கால அரசுகளைக் காட்டிலும் தற்போதைய அரசு, தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்க மிக நுணுக்கமான அரசியல் காய்நகர்த்தல்களைச் செய்கின்றது.
யுத்தம் மௌனிக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும், எமது பூர்வீகக் காணி அபகரிப்புகள் ஓயவில்லை. இராணுவமயமாக்கல் ஊடாக எமது நிலங்கள் பறிக்கப்படுவதும், மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதும் இன்றும் தீர்க்கப்படாத வலிகளாகத் தொடர்கின்றன.
இதற்குப் பின்னால் இருப்பது மிகத் தெளிவான சிங்கள மேலாதிக்க மனநிலை. தமிழர்களைத் தமக்குச் சமமான குடிமக்களாகக் கருதாது, இழிவான பார்வையுடன் அடக்கி ஒடுக்கும் போக்கையே அவர்கள் இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இத்தனை ஒடுக்குமுறைகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில்தான், கடந்த 16 ஆண்டுகளில் நாம் அழிந்துபோன நிலையிலிருந்து மீண்டு, அறத்தின் வழியிலான அரசியலை முன்னெடுத்துள்ளோம்.
எமது கொள்கை மீதான நேர்மையும், மக்களுக்காகத் துணிந்து நிற்கும் குணமுமே இன்று இந்த மண்ணின் மக்களை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
எமது சமூக மேன்மைக்கான இந்த நகர்வுகளைத் தகர்ப்பதற்குப் புலனாய்வுத் துறையினரும், ஒட்டுக்குழுக்களும் எம்மோடு ஒட்டிக்கொண்டு கடும் பிரயத்தனம் செய்வார்கள். ஆனால், எத்தகைய சதித்திட்டங்கள் வந்தாலும் தியாக தீபம் திலீபனைப் போன்றும், தியாகத்தாய் அன்னை பூபதி போன்றும் நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும்.
அன்னை பூபதி அம்மா அவர்கள் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தனது உயிரையே ஈகம் செய்து எமக்குக் கற்பித்த உறுதியான கொள்கைத் தெளிவுள்ள விடுதலைக்கான அறைகூவலை, அதே உறுதியுடனும் தேசப்பற்றுடனும் நாம் உலகிற்கு உரக்கச் சொல்வோம்.
எமது வீரஞ்செறிந்த போராட்ட வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லும் வரலாற்றுப் பணியை அன்னை பூபதியின் நினைவில் நின்று தொடர்வோம்-என்றார்.
