பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் பாதுகாப்பு உச்சளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரானுடனான ஒப்பந்தத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் செல்வார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளமையால் அங்கு பாதுகாப்பு உச்சளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே. டி வான்ஸ், ஸ் ரீவ் விற்கோப் ஆகியோர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை – ஏப்ரல் 21ஆம் திகதி இஸ்லாமாபாத் செல்லவுள்ளனர்.
தூதரக வட்டாரங்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் ஈரான் – அமெரிக்கா இடையே வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை ஒப்பந்தம் கைச்சாத்தாகலாம். எனினும், இது குறித்து உத்தியோகபூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் பொதுப் போக்குவரத்து மற்றும் கனரக வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் ராவல்பிண்டியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளையில் 600க்கும் மேற்பட்ட சிறப்புச் சோதனை பிரிவினர் நகரின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களையும் கண்காணித்து வருகின்றனர்.
வெளிநாட்டு தூதுக்குழுக்களின் வருகையின்போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 100 ஸ்னைப்பர் வீரர்கள் உட்பட 400 உயரடுக்கு கொமாண்டோக்களும் பஞ்சாப் நெடுஞ்சாலை ரோந்து படையைச் சேர்ந்த 4 ஆயிரம் வீரர்களும் டொல்பின் படையைச் சேர்ந்த 200 உறுப்பினர்களும் நகரம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
