2009இல் இடம்பெற்ற படுகொலைகள், சர்ச்சை சம்பவங்களை காலமாற்றத்தில் மறக்கடிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் சகோதரர்கள், பிள்ளைகள், உறவினர்கள் குறுகிய காலத்தில் திரட்டிய சொத்து விவரங்களை வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் குறித்த சொத்து;கள் நீதிமன்றத்தின் ஊடாக அரசுடமையாக்கப்படும்- என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கொழும்பு – மஹரகம பகுதியில் நேற்று – மே முதலாம் திகதி தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
2022 ஆம் ஆண்டு வங்குரோத்து நிலையடைந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். அன்று நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் இன்று பொருளாதார மீட்சி பற்றி கருத்து தெரிவிக்கிறார்கள்.
வங்குரோத்து நிலையடைந்த எதிர்க்கட்சியினர் இன்று ஒன்றுகூடி அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள். ஜி. எல். பீரிஸின் வீட்டின் ஒன்றிணைந்து பேசுகிறார்கள். அதன் பின்னர் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்கள். வேலையில்லாத காரணத்தால் ஏதாவது பேசட்டும – கலந்துரையாடட்டும். இவர்களின் ஒன்றுக்கூடல்கள் ஒருபோதும் அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது.
2029ஆம் ஆண்டு ஆட்சி பற்றிப்பேசும் ராஜபக்ஷர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள தமது சகோதரரை நாட்டுக்கு வர சொல்ல வேண்டும். சிவப்பு பிடியாணை பிறப்பித்தாவது நாட்டுக்கு அழைத்து வருவேன் – என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
