மழை பெய்யும்போது நமக்காக ஒருவர் அன்பாகக் குடை பிடித்தால் மனம் குளிர்ந்துபோகும்.
அதுபோன்ற மனம் நெகிழவைக்கும் அனுபவம் சிங்கப்பூரின் தியோங் பாரு பிளாஸா பேருந்து நிறுத்தத்தில் சில பயணிகளுக்குக் கிடைத்துள்ளது.
கடந்த மாதம் 27ஆம் திகதி மதியம் திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது.
SBS நிறுவனத்தின் 121ஆம் எண் பேருந்துச் சேவைக்காகப் பயணிகள் சிலர் காத்திருந்தனர்.
பேருந்து வந்தது, கதவும் திறந்தது. குடை பிடித்தபடி புன்னகையுடன் ஓட்டுநர் கதவின் அருகில் வந்து நின்றார். பயணிகள் மழையில் நனையாமல் பேருந்தில் ஏற உதவினார்.
அதைக் காணொளியாகப் பதிவுசெய்து TikTok இல் பகிர்ந்துள்ளார் ஓர் இணையவாசி.
ஓட்டுநரின் கனிவான செயலைக் கண்டு பயணிகளும் முகம் மலர்ந்தனர் என்று அவர் சொன்னார்.
‘அவர் தமது வேலையை மிகவும் நேசிப்பதை அவரின் செயல் காட்டுகிறது,’ என்றும் பாராட்டினார்.
அந்தப் பதிவைக் கண்ட மற்ற இணையவாசிகளும் ஓட்டுநரின் நல்ல உள்ளத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
‘2026இன் சிறந்த பேருந்து ஓட்டுநர் இவர்தான்,’ என்று பலர் புகழ்ந்தனர்.
