சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளுடன் இன்று தமிழக முதல்வரைச் சந்தித்த நடிகை குஷ்பு தயாரிப்பாளர்கள் சார்பில் சில கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்தார்.
முதல்வரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய குஷ்பூ, “சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக சின்னத்திரையில் கஷ்டப்படும் தயாரிப்பாளர்களின் நலனுக்காக சில கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்துள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறோம் என முதல்வரும், அமைச்சர் ராஜ்மோகனும் தெரிவித்தனர்.
முதல்வர் விஜய்யை எனது தம்பி என்று சொல்வதற்கு எனக்குப் பெருமையாக உள்ளது. ஒரு அக்காவாக அவரை இன்று நேரில் பார்த்ததும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. அவரது செயல்பாடுகள் பற்றி சொல்லவேண்டுமென்றால், நிச்சயமாக தமிழகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறார் எனத் தெரிகிறது.
அனைவரும் மாமனா, மச்சானா என்று பார்க்காமல் மக்களுக்காக நல்லது செய்யும் நோக்கில் செயல்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பற்றி கேள்வியெழுப்பியபோது, “அது ரொம்ப கஷ்டமான விஷயம். யாரும் அப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. நம் சமுதாயத்தில் இந்த மாதிரி மிருகங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த உடன் அனைத்தையுன் சரிப்படுத்த வேணுமென்றால் எப்படி. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் மாற்றி மாற்றி ஆட்சி செய்தும் ஒன்றும் செய்யமுடியவில்லையே? 10 நாட்களில் மாற்றங்களை எப்படி கொண்டு வர முடியும்?
அவருக்கு அதற்கான நேரத்தைக் கொடுங்கள். உங்கள் தந்தையும் நீங்களும் இத்தனை ஆண்டுகளாகக் கொண்டு வரமுடியாத மாற்றத்தை விஜய் பத்து நாள்களில் எப்படிக் கொண்டுவரமுடியும்? நிச்சயமாக மாற்றம் வரும். அதற்காகத் தான் விஜய்யை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று பேசினார்.
