முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் சுரேஷ் சாலே சிறைக்குள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார் என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது.
இன்று ஜூன் 05ஆம் திகதி கொழும்பு பத்தரமுல்லையில் அந்தக் கட்சியின் தலைமையகத்தில் ஊடக சந்திப்பை நடத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத், சம்பத் அத்துகோரள ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
மேலும், ‘முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலே நீதிமன்றத்தில் பிணை கோரியிருந்தபோது, அவர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று இரு புகழ்பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த கால மக்கள் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்தவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோதுகூட அவர்களுக்கு எந்தவொரு உடல்ரீதியான சித்திரவதைகளும் செய்யப்படவில்லை. ஆனால்இ சுரேஷ் சாலேவுக்கு இவ்வாறு நடந்திருக்குமாயின், அதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். புலம்பெயர் தமிழரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் – என்றும் அவர்கள் கூறினர்.
