கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பாடகர் சங்கீத்சன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல இன்றைய தினம் அனுமதியளித்தது.
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகர் க. சங்கீத்சன் சாவகச்சேரியில் கோயில் ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்வில் சொல்லிசை பாடலை பாடியிருந்தார். அந்தப் பாடலை அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் பொலிஸார் சங்கீத்சனை கடந்த 2ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன. அத்துடன், உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இதேநேரம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை பிணை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சங்கீத்சனுக்கு எதிரான வழக்கை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யாமல் சாதாரண குற்றவியல் வழக்காக மாற்றுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கினார்.
இதையடுத்து, இன்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து சங்கீத்சன் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது. எனினும், உரிய ஆவணங்கள் மன்றுக்கு கிடைக்காத காரணத்தால் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஆனாலும் மீண்டும் நகர்த்தல் பத்திரம் ஊடாக மீண்டும் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் சங்கீத்சனை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
