சிங்கப்பூரில் கழிவுகளை அகற்றும் சேவைக்கான கட்டணம் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், தரையுடன் தொடர்பில்லாத தனியார் வீடுகள் ஆகியவற்றுக்கான மாதாந்தக் கட்டணம் $10.20லிருந்து 44 அதிகரித்து $10.64ஆக உயரும் என்று தேசியச் சுற்றுச்சூழல் அமைப்பு, இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்புகள், கூட்டுரிமை வீடுகள், மின்தூக்கி வசதியில்லாத வீடுகள், டியூப்ளெக்ஸ் வீடுகள் ஆகியவை தரையுடன் தொடர்பில்லாத தனியார் வீடுகளில் உள்ளடங்கும்.
இதற்கிடையே, தரையுடன் தொடர்புடைய வீடுகளில் வசிப்போருக்கான மாதாந்தக் கட்டணம் $34லிருந்து $1.50 அதிகரித்து $35.50ஆக உயரும். இரண்டு கட்டணங்களிலும் 9 வீதம் பொருள், சேவை வரி (ஜி.எஸ்.டி.) அடங்கும்.
திருத்தப்பட்ட இந்தக் கட்டணங்கள், சிங்கப்பூரின் ஒட்டுமொத்தக் கழிவு மேலாண்மை அமைப்பு நீடித்துச் செயல்படுவதை உறுதிசெய்யும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியது.
பொதுக் கழிவுப் பொருள்களை அகற்றும் நிறுவனங்களின் செயலாக்க, மனிதவளச் செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டணங்களைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது இருப்பதாக அமைப்பு கூறியது.
