தனது கர்ப்பிணி காதலியைக் கத்தியால் குத்திக் கொலை செய்து, அவரது உடலை எரித்த 23 வயது முன்னாள் கல்லூரி மாணவருக்கு, மேல்முறையீட்டு நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்துள்ளது.
நீதிபதி அஸ்மான் அப்துல்லா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஃபக்ருல் ஐமன் சஜாலியின் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டை ஏற்று, அவருக்கு முன்னர் விதிக்கப்பட்ட மரண தண்டனையை சிறைத் தண்டனையாக மாற்றியது.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் 15 அன்று, கிள்ளான் உயர் நீதிமன்றம், 2023 மே 22 அன்று இரவு 8.30 மணிக்கும் மே 23 அன்று காலை 8 மணிக்கும் இடையில், சபா பெர்னாமில் உள்ள ஜாலான் சுங்கை லிமாவில் 21 வயதான நூர் அனிசா அப்துல் வஹாப் என்பவரைக் கொலை செய்த குற்றத்தை ஃபக்ருல் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்தது.
ஃபக்ருல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை நிலைநிறுத்தியதால், நீதிபதி நொராஸ்லின் ஓத்மான் இந்தத் தண்டனையை வழங்கினார்.
வழக்கின் தகவல்களின்படி, ஃபக்ருல் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலையில் தடியால் தாக்கியதோடு, அவரை ஒரு சாக்கடைக்கு இழுத்துச் சென்று, வயிற்றில் கத்தியால் குத்தி, கழுத்தையும் வெட்டியுள்ளார்.
பின்னர், சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் துறை அளித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை, அவரது உடலின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான தீக்காயங்கள் இருந்ததை உறுதி செய்தது!
