போதைப்பொருள் வியாபாரிகளை ஒடுக்குவதற்கு, அவர்கள் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயன்றால் சுட்டுக் கொல்வது உட்பட, கடுமையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என மலேசியாவின் கெடா மாநிலத்தின் மந்திரி பெசார் சனுசி நோர் அழைப்பு விடுத்துள்ளார்.
கெடாவிலும் நாட்டிலும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் ஒரு தீவிரமான பிரச்சினையாகவே நீடிக்கிறது என்றும், அது குடும்பங்களையும், அத்தகைய போதைப்பொருட்களுக்கு அடிமையான இளம் மலேசியர்களின் எதிர்காலத்தையும் அழித்து வருகிறது என்றும் சனுசி தெரிவித்துள்ளார்.
பொலிஸாரால் இத்தகைய போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்ய முடியாவிட்டால், அத்தகையவர்கள் அச்சுறுத்தலாக இருந்தாலோ அல்லது தப்பிக்க முயன்றாலோ அவர்களைச் சுட்டுக் கொல்லலாம் என்று அவர் கூறினார். அதே சமயம், தனது இந்த யோசனை சர்ச்சைக்குரியது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
எந்த போதைப்பொருள் வியாபாரியையும் பாதுகாக்க வேண்டாம், அவர்கள் அனைவரையும் கைது செய்யுங்கள். நம்மால் அவர்களைக் கைது செய்ய முடியாவிட்டால், சுட்டுக் கொல்லுங்கள். போதைப்பொருள் வியாபாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இது சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் செயல்படுத்துங்கள் என்று கூறினார்.
போதைப்பொருள் கும்பல்கள், விநியோக நடவடிக்கைகளுக்காக லங்காவியை ஒரு இடைவழி மையமாகப் பயன்படுத்துவது குறித்து தனக்குத் தகவல் கிடைத்திருப்பதாக சனுசி கூறினார்!
