கன்னியாவில் புதிய கட்டுமானம் – நீதிமன்றத் தடையை மீறி அடிக்கல் நாட்டியது தொல்பொருள் திணைக்களம்

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 136 ஆவது தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, அவ்விடத்தை சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட அரச அதிபர் டபிள்யு.எம்.ஹேமந்தகுமார இதில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் வில்கம் விஹாரையின் நாயக்க தேரர் அம்பிட்டியே சீலவண்ஸ திஸ்ஸ தேரர் அனுசானம் வழங்கினார்.

திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதேச கிராம சேவகர், இஸ்லாமிய மத குரு மற்றும் துறைசார் அலுவலர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அடிக்கற்களை நாட்டி வைத்தனர்.

வரலாற்றுப் பின்னணியும்
காணி உரிமையாளரின் வாதமும்

சோழர் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழி மூலம், தமிழர்களான பௌத்தர்களுக்குப் பௌத்த கல்வி கற்பிக்கும் சைத்தியம் ஒன்று அங்கு காணப்பட்டது என்று வரலாறுகள் கூறுகின்றன. இதன் பின்னர் அதே இடத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிள்ளையார் கோயில் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வந்தன.

இந்தக் காணி மடத்தடி முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமானது எனக் குறிப்பிடும் உரிமையாளரான திருமதி கோகிலவதனி கணேஷ் இது குறித்துத் தெரிவிக்கையில்,

“2002 ஆம் ஆண்டு சிதிலமடைந்த கோயிலைப் புனர்நிர்மாணம் செய்ய நாம் முயன்றபோது அது தொல்பொருள் திணைக்களத்தால் தடுக்கப்பட்டது. இது தொடர்பில் நான் தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தேன். இந்நிலையில், 2022 இல் இந்த இடத்தில் எந்தக் கட்டுமானங்களும் அமைக்கக் கூடாது என்று மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டார்.” – என்றார்.

எனினும், தற்போது நீதிமன்ற உத்தரவையும் மீறி குறித்த இடத்தில் கட்டுமான வேலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles