இராணுவத்தின் பிடியிலுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி வலி. வடக்கு மக்கள் இன்றைய தினம் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து ஜூன் 15ஆம் நாளான இன்றுடன் 36 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதையொட்டியே இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலுமாக இரு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது தமது காணி விடுவிப்பு தொடர்பான கோரிக்கை அடங்கிய மனுவை போராட்டக்காரர்கள் மாவட்ட செயலரிடமும் மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்களிடமும் கையளித்தனர்.
இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், மதத் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.




