பிரித்தானிய பிரதமர் கெயர் ஸ்டாமர், அடுத்ததாக ஆட்சியை பொறுப்பேற்க காத்திருக்கும் அண்டி பர்ன்ஹாமிற்கு முக்கிய செய்தியொன்றை வழங்கியுள்ளார்.
அதாவது சர்வதேச விவகாரங்களில் ஸ்டாமர் செலவிட்ட நேரத்தை விட அதிக நேரத்தை அடுத்த பிரதமர் செலவிட நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பி.பி.சி. ஊடகத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வருங்காலப் பிரதமர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு இடையே ஒரு தெளிவான கோட்டை வரைய முடியும் என்ற கருத்தை மறுத்த அவர், நவீன காலத்தில், சர்வதேச மற்றும் உள்நாட்டு விவகாரங்களை எளிமையாகப் பிரிக்க முடியும் என்ற யோசனை அர்த்தமற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
“உக்ரைன் நிலைமைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதிலும் நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும், ஹோர்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது என்பதிலும் நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும்,” என்றும் இந்த இரண்டு விஷயங்களையும் நீங்கள் வெறுமனே பிரித்துவிடலாம் என்று நினைப்பது புத்திசாலித்தனம் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாமர் தனது பதவி காலத்தின் பெரும்பாலான நேரத்தை, உள்நாட்டு விவகாரங்களைப் புறக்கணித்து உலக அரங்கில் அதிக கவனம் செலுத்துகிறார் என்ற விமர்சனங்களுக்கு ஸ்டாமர் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதேநேரம் அண்டி பர்ன்ஹாமின் தேர்தல் பிரச்சாரங்கள், முன்மொழிவுகள் அனைத்தும் உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்டாமரின் இந்த கருத்து முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
