ஓகஸ்ட் 30இல் யாழில் சர்வதேச மாநாடு; காணாமல்போனோரின் உறவுகள் அறிவிப்பு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று(07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்தத் தகவலை வெளியிட்டனர்.

அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளிலும், தமிழர் என்கின்ற அடையாளத்தோடு இலங்கைத் தீவின் அனைத்துப் பாகங்களிலும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் அரச படைகளாலும், துணை ஆயுதக்குழுக்களாலும் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்தத் துயர் தோய்ந்த வரலாறு 1948 ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பிக்கின்றது.

இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்றோ, அதற்கான பொறுப்புக்கூறலையோ வெளிப்படுத்தாத இலங்கை அரசு, பல தசாப்தங்களாக மௌனம் சாதித்து வருகின்றது.

விசாரணை என்கின்ற பெயரில் ‘திருடனே குற்றவாளியைத் தேடும் படலத்தை’ அரசு அரங்கேற்றி வருகின்றது. நீதி கோரும் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் அரசின் உள்நாட்டுப் பொறிமுறைகள் குறித்து எமது பலத்த எதிர்ப்பையும், அதிருப்தியையும் நாம் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியே வருகின்றோம்.

இப்போது ஆட்சிப்பீடத்திலிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசு, முந்தைய அரசுகளைவிட மிகத் தந்திரோபாயமாக இந்த விவகாரத்தைக் கையாள்கின்றது.

தெற்கிலும் சிங்கள இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், வடக்கிலும் தமிழ் இளையோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், எனவே தெற்கோடு கைகோர்த்து இதற்குத் தீர்வு காண்போம் என்று அரசு கூறுகின்றது. அடிப்படையில் அறமற்ற இந்த வாதம், எமது கண்ணீரை விலை பேசுகின்றது. தெற்கில் உள்ளவர்கள் நட்டஈட்டைப் பெற்றுக்கொண்டு மரணச் சான்றிதழில் கையெழுத்திட்டிருக்கலாம். ஆனால், நாம் எமது பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு நட்ட ஈட்டையோ அல்லது அரச வேலை வாய்ப்புக்களையோ பெற்றுக்கொள்ளத் தயாரில்லை. எமது பிள்ளைகள் எங்கே? என்பதற்கான நீதியை மட்டுமே நாம் கேட்கின்றோம்.

கடந்த காலங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் செம்மணி போன்ற மனிதப் புதைகுழிகளில் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் காட்டி, அரசு வழங்கும் நட்டஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு எங்களைத் தள்ளிவிடும் உளவியல் போரை இந்த அரசு நடத்தி வருகின்றது.

நீதி கோரி நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் காரணமாக, இதுவரை 400 இற்கும் மேற்பட்ட தாய், தந்தையர் நீதி கிடைக்காமலே இறந்துவிட்டனர். அவர்களின் மறைவின் பின்னர் இந்தத் தேடலின் வீச்சு அருகி வருகின்றது.

இவ்வாறானதொரு சூழலில், இலங்கை அரசின் உள்நாட்டுப் பொறிமுறைகளை முழுமையாக நிராகரித்து, சர்வதேச நீதியைக் கோரும் முகமாகவே இந்த வருட சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் அமையவுள்ளது. எனவே, அரசியல் கட்சி பேதமின்றிப் பொது அமைப்புகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்த மாநாட்டுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.” – என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles