தமது நாட்டுக்கு எதிராக பிரித்தானியா அதிகாரிகள் முன்வைத்துவரும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, ஈரான் வெளிவிவகார அமைச்சு, பிரித்தானிய தூதுவரை நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளிவிவகார அமைச்சின், மேற்கு ஐரோப்பாவிற்கான துணைத் தலைவர் அலிரேசா யூசுபி , லண்டனின் இந்த அணுகுமுறையை கண்டித்து தூதுவர் ஹ்யூகோ ஷார்டரிடம் ஒரு எழுத்துப்பூர்வமான எதிர்ப்பு கடிதத்தை வழங்கியதாக Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘Iran International’ ஊடகத்தின் ஊடகவியலாளர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இரண்டு ருமேனிய ஆண்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள ஈரானின் மூத்த இராஜதந்திரியை பிரித்தானியா அழைத்து விசாரித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பிரித்தானியாவில் ஈரான் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முயன்றதாக பிரிட்டிஷ் தரப்பு கூறும் குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றவை என யூசுபி நிராகரித்துள்ளார்.
மேலும், பிராந்தியத்தை சீர்குலைப்பதில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பிரித்தானியாகூட்டுச் சேர்ந்துள்ளதாகவும், சர்வதேச சட்டத்திற்கு முரணான அழிவுப்பூர்வமான நடத்தையில் அந்நாடு ஈடுபடுவதாகவும் அலிரேசா யூசுபி குற்றம் சாட்டியுள்ளார்.
