பிரதமர் நரேந்திர மோடி – நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் முன்னிலையில் இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, சுற்றுலா உட்பட 5 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று நியூசிலாந்து சென்றார். அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அவரை விமான நிலையத்துக்கே சென்று ஆரத்தழுவி வரவேற்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடி – பிரதமர் லக்சன் இடையே தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதையடுத்து, பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், சுற்றுலா, விளையாட்டு, பேரிடர் மேலாண்மை ஆகிய ஐந்து துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் தொடர்பான ஆராய்ச்சி, புத்தாக்கம், சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் இத்துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கவும், பயணத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் சுற்றுலாத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாட்டு வீரர்களின் பரிமாற்றம், விளையாட்டு மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை சார்ந்த கூட்டு செயல் திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். பேரிடர் தயார்நிலை, அவசரகால நடவடிக்கை, பேரிடரை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பேரிடர் மேலாண்மை துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஐந்து ஒப்பந்தங்களும் இந்தியா – நியூசிலாந்து இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மையையும், பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
