பங்களாதேஷில் கனமழை தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. அந்நாட்டின் சிட்டகொங் மாகாணத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகின்றது.
கனமழையால் அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவில் சிக்கி இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர் என பங்களாதேச அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, மொத்தம் 64 மாவட்டங்களில் உள்ள 7 மாவட்டங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன. 10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
இவற்றில் அதிக அளவாக காக்ஸ் பஜார் மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். சட்டோகிராம் பகுதியில் 13 பேர், பந்தர்பன் பகுதியில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பலர் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள ரோகிங்கியா முஸ்லிம்கள் ஆவர்.
