வவுனியா, புளியங்குளம் – புதூர் சந்திப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கித் தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர், ஏ – 9 வீதி புளியங்குளம், புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பிறிதொரு வாகன முந்திக்கொள்ள முற்பட்டுள்ளார். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாகப் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
