எதிர்வரும் ஓகஸ்ட் 12ஆம் திகதி வட அரைக்கோளத்தின் பல பகுதிகளில் அரிதான ‘முழு சூரிய கிரகணம்’ நிகழவுள்ள நிலையில், இந்த அரிய வானியல் நிகழ்வை உலகெங்கிலும் உள்ள மக்கள் நேரடியாகப் கண்டுகளிக்கும் வகையில், நாசா தனது உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களில் நேரலை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யாவின் வட பகுதி, அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய பகுதிகளில் சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டு ‘முழு சூரிய கிரகணம்’ தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், கனடா, ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் வடமேற்கு ஆபிரிக்க நாடுகளில் இது பகுதி கிரகணமாகக் காட்சி அளிக்கும்.
பகுதி கிரகணம் தொடங்குவது முதல் முடிவது வரை முழு நிகழ்வும் சுமார் 4 மணி நேரமும் 23 நிமிடங்களும் நீடிப்பதுடன், ஐஸ்லாந்தின் மேற்கு பகுதியில் சூரியன் முழுமையாக மறைக்கப்படும் உச்சக்கட்ட நிகழ்வு 2 நிமிடங்கள் 18 வினாடிகள் வரை நீடிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரகணம் நிகழும் அதே இரவில், ஆண்டின் புகழ்பெற்ற ‘பெர்சீட்ஸ் விண்கல் மழை’ மற்றும் அமாவாசை இரவும் இணைவது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்.
சூரியனின் வளிமண்டல மேலடுக்கான ‘கொரோனா’ பகுதியை விரிவாக ஆய்வு செய்ய அறிவியல் குழுக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன. நாசாவின் அதிவேக ஆராய்ச்சி ஜெட் விமானங்கள் நிலவின் நிழலைப் பின்தொடர்ந்து பறந்து தரவுகளைச் சேகரிக்கவுள்ளன. மேலும், அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெய்னில் அறிவியல் பலூன்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளன.
முக்கியமாக சூரிய கிரகணத்தை வெறும் கண்களாலோ அல்லது சாதாரண கூலிங் கிளாஸ்கள் மூலமாகவோ பார்க்கக்கூடாது. ISO 12312-2 சான்றிதழ் பெற்ற பிரத்யேக சூரிய கிரகணக் கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நாசா எச்சரித்துள்ளது.
இதேவளை, ஓகஸ்ட் 12ஆம் திகதி இரவு வேளையில் இந்த நிகழ்வு நடைபெறுவதால், இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இதனை நேரில் பார்க்க முடியாது. இருப்பினும், விண்வெளி ஆர்வலர்கள் நாசாவின் நேரலை ஒளிபரப்பு மூலம் தங்களது மொபைல் மற்றும் கணினிகளில் நேரடியாகக் கண்டு ரசிக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.
