போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதுடன், பல டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் பிரதிநிதிகள், கட்டார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையிலேயே, இந்த குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
காஸா சுகாதார அமைச்சு வியாழக்கிழமையன்று வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் காஸா பகுதி முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு 6 உடல்களும், காயமடைந்த 34 பேரும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதில் புதிதாகக் கொல்லப்பட்ட நால்வரின் உடல்களும், ஏற்கனவே காயமடைந்து உயிரிழந்த ஒருவரின் உடலும், இடிபாடுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட ஒருவரின் உடலும் அடங்கும்.
தெற்கு நகரமான கான் யூனிஸில், இடம் பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த தற்காலிகக் கூடார முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்ஆணொருவரும், 8 வயது சிறுவன் ஒருவனும் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் ‘ரொய்ட்டர்ஸ்’ செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் முற்றுகை காரணமாக 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் (மொத்த மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதம்) வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
