கனடாவில் வீதியில் இறங்கிய விமானம் கார் ஒன்றின் மீது மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
நேற்று மதியம் 2.20 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பிரின்ஸ் ஜார்ஜ் நகரில், நெடுஞ்சாலை ஒன்றில் திடீரென சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.
அப்போது சாலையில் வரிசையாக வாகனங்கள் வந்துகொண்டிருக்க, விமானத்தின் இறக்கை, வேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியுள்ளது.
விமானத்தில் எட்டு பேரும், காரில் இரண்டு பேரும் பயணித்தனர் என கூறப்படும் நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
உயிரிழந்தவர், காரில் பயணித்தவரா அல்லது விமானத்தில் பயணித்தவரா, ஆணா அல்லது பெண்ணா என பொலிசார் தெரியப்படுத்தவில்லை.
எதனால் விமானம் திடீரென சாலையில் தரையிறங்கியது என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், அந்த சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
