சவூதி அரேபியாவில் நிரந்தர செயலகம் அமைக்க தீர்மானம்

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையே கையொப்பமாகியுள்ள ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை’ நடைமுறைப்படுத்துவதற்காக, சவூதி அரேபியாவில் நிரந்தர செயலகம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான முதலாவது உயர்மட்டக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 7ஆம் திகதி மெக்காவில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயீப் எர்டோகன் ஆகியோரால் குறித்த முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

உறுப்பு நாடுகளின் தற்காப்புத் திறனை அதிகரித்தல், முப்படைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், கூட்டுப் பயிற்சிகளை முன்னெடுத்தல், உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் இணைந்து செயல்படுதல் ஆகியவை ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

மேலும், உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகக் கருதப்பட்டு கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நேட்டோ’ பாதுகாப்பு அமைப்பின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டமைப்பின் முதல் உயர்மட்டக் கூட்டத்தில் மூன்று நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

செயலகத்தின் முதல் பொதுச் செயலராக பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு பதவியேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ‘மெக்கா’ கூட்டமைப்பில் எகிப்தையும் இணைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதுடன், மேலும் 6 முதல் 7 முஸ்லிம் நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles