பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் இடிப்பு : இந்தியா கடும் கண்டனம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலத்தைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சாடியுள்ளது.

லாகூரிலிருந்து சுமார் 130 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் அமைந்திருந்த இந்த கோயில், மதரஸா கட்டுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்டு இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், “சிராஜ் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்ட செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளம் மீதான இந்த வன்முறையை இந்தியா திட்டவட்டமாக கண்டிக்கிறது.

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இடிக்கப்பட்ட கோயிலை உடனடியாகச் சீரமைத்து, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மதரஸா அமைப்பதற்காக பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டே இக்கோயிலை இடித்துள்ளனர் என பாகிஸ்தான் மசிஹா மில்லத் கட்சியின் தலைவர் அஸ்லம் பர்வேஸ் சாஹோத்ரா குற்றம்சாட்டியுள்ளார். தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் அமைப்பின் உறுப்பினர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் எனவும், கோயிலின் செங்கற்கள் மற்றும் உலோகப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கனமழை காரணமாகவே 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான இந்த கட்டடம் இடிந்து விழுந்ததாகப் பாகிஸ்தானின் வெளியேறியோர் சொத்து அறக்கட்டளை வாரிய அதிகாரி ராணா இப்திகார் தெரிவித்துள்ளார். கோயிலின் நிலம் யாருக்கும் குத்தகைக்கு விடப்படவில்லை என்றும், கட்டிடத்தைச் சீரமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles