யேமனின் மஃரிப் பகுதிக்கு மேல் சவூதி அரேபியாவின் F-15 போர் வானூர்தி ஒன்றை, தரைவழி – வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர்.
இந்த நிலைமையில், பாப் அல்-மந்தேப் கடல் வழிப்பாதைக்கு அருகில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
மஃரிப் வான்வெளியில் தாக்குதல் நடத்திய சவூதி F-15 போர் விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தங்களின் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரியா (Yahya Saree) தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சவூதி தரப்பில் இருந்து இந்தக்கூற்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதுவரைக் காலமும், சவூதி அரேபியா மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசு ஆகியவற்றின் மிகப்பெரிய பலமாக வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே இருந்தன.
எனினும் ஹூதிகளால் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க முடிந்தால், அது போரின் சக்தி சமநிலையை அவர்களுக்குச் சாதகமாக மாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்கா மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், நம்பிக்கையைப் பெற நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்க வேண்டும் என்றும் ஈரானின் தேசிய பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.
ஈரானின் நிபந்தனைகள் ஏற்கும் வரை அமெரிக்காவுடான பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
