காசா விவகாரத்தில் உலக நாடுகளின் அலட்சியம் : ஐ.நா. சபையில் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஆதங்கம்

காசாவில் பலஸ்தீனிய மக்களின் துன்பங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சமூகம் உடனடி மற்றும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய மிக முக்கியமான இடமாக காசா மட்டுமே விளங்குவதாக மலேசியா ஐநா சபையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வரும் 81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் (UNGA) கூட்டத்தில் மலேசியாவின் தேசிய அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் ஹசான், காசா விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பயனற்ற போக்கால் மலேசியா சோர்வடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

“பல உறுப்பு நாடுகள் பலஸ்தீனத்திற்கு நீதி கோரித் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், இந்த நாடுகளின் கூட்டு விருப்பம் ‘வீட்டோ’ (Veto) அதிகாரத்தின் மூலம் தொடர்ந்து தடுத்து நிறுத்தப்படுகிறது. மலேசியா இதனை வெளிப்படையாகவே கூறுகிறது — நாங்கள் இதனால் மிகுந்த சோர்வடைந்து விட்டோம்” என்று டத்தோஸ்ரீ முஹமட் ஹசான் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை என்பது போருக்குப் பிந்தைய விளைவுகளையும் சேதங்களையும் கையாள்வதற்காக மட்டும் நிறுவப்பட்ட அமைப்பல்ல, மாறாகப் போர் நடப்பதைத் தொடக்கத்திலேயே தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது என்றும் அவர் நினைவுறுத்தினார்.

“ஆனால், பல சமயங்களில் பேரழிவு நிகழ்ந்து முடிந்த பின்னரே நாம் செயல்படுகிறோம். உயிரிழப்புகளைக் கணக்கிடுகிறோம், நிவாரணப் பொருட்களை அனுப்புகிறோம், அழிக்கப்பட்டதை மீண்டும் கட்டியெழுப்புகிறோம். பிறகு அடுத்த நெருக்கடிக்காகக் காத்திருக்கிறோம்.

எனவே, பலதரப்பு சர்வதேச ஒத்துழைப்பின் எதிர்காலமானது, பேரழிவு நடந்த பின் பதிலளிப்பதிலிருந்து அதைத் தொடக்கத்திலேயே தடுப்பதை நோக்கி உடனடியாக மாற வேண்டும்,” என மலேசியாவின் சார்பில் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles