இந்தியாவின் வெளியுறவு அணுகுமுறையை தற்போது அமெரிக்காவும் பின்பற்றுகிறது: ஜெய்சங்கர்

பல்வேறு சர்வதேச கூட்டணிகள் மற்றும் உறவுகளை ஒரே நேரத்தில் நிர்வகிக்கும் இந்தியாவின் அணுகுமுறையை தற்போது அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் 81வது கூட்டத்தொடரின் உயர்மட்ட நிகழ்வுகள் நியூயார்க்கில் நிறைவடைந்த நிலையில், ஆசியா சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த சிறப்பு உரையாடல் நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் இந்திய சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டானியல் ரஸ்ஸல் இதில் பங்கேற்று ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய ஜெய்சங்கர், “ஓர் உலகளாவிய சக்தியாக அமெரிக்கா தனக்கான பல்வேறு வாய்ப்புகளை தொடர்ந்து திறந்தே வைத்திருந்தாலும், இந்தியா அவ்வாறு இருக்கக்கூடாது என்று ஒருகாலத்தில் அது கருதியது. இந்தியா தனது தேர்வுகளை குறைத்துக்கொண்டு, அமெரிக்கா உடனான உறவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று அது எதிர்பார்த்தது.

நாடுகள் ஒன்றுடன் ஒன்று வெளிப்படையாக ஈடுபடும் போக்கு அதிகரித்து வருவதால், இத்தகைய ராஜதந்திர போக்குகள் இப்போது மறைந்துவிட்டன. பல்முனை உலகத்தை நோக்கிய சர்வதேச உறவுகளின் பரந்த மாற்றத்தின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றம் அமைந்துள்ளது.

பல்வேறு சர்வதேசக் கூட்டணிகள் மற்றும் உறவுகளை ஒரே நேரத்தில் நிர்வகிப்பது என்ற இந்தியாவின் நீண்டகால தன்னாட்சிக்கான வியூகத்தை தற்போது அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டுள்ளது. இப்போது அமெரிக்காவும், சீனா, ரஷ்யா, உக்ரைன், ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகள் என பலருடன் ஒரே நேரத்தில் இணைந்து செயல்படுகிறது.

இந்தியாவைப் பற்றி மக்கள் முன்பு என்ன சொன்னார்களோ, இன்று அதையே அமெரிக்கா மிகுந்த ஆர்வத்துடன் பின்பற்றுகிறது. உண்மையில் இந்தியா பின்பற்றி வந்ததையே இப்போது வாஷிங்டனும் பின்பற்றுகிறது.” என தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles