மத்திய கிழக்கில் இடம்பெறும்போர், ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தைப் பாதித்து, வளைகுடா நாடுகளின் ஏற்றுமதியையும் சீர்குலைத்துள்ளது.
இதன் விளைவுகள் எரிசக்தித் துறையைத் தாண்டிப் பல துறைகளையும் பாதித்துள்ளதாக கட்டார் எச்சரித்துள்ளது.
அத்துடன் ஈரான் – அமெரிக்கா இடையே தொடர்ந்து மத்தியஸ்தம் செய்து வருவதாகவும் உறுதியளித்துள்ளது.
ஈரான் தொடர்பான போர் உலகப் பொருளாதாரத்தின் மீது “தாங்க முடியாத” சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கத்தார் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் டோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் மஜித் அல்-அன்சாரி, “எங்கள் பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகளின் விளைவுகளை உலகப் பொருளாதாரம் எவ்வளவு காலத்திற்குத் தாங்கிக்கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
ஒப்பந்தம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எந்தவொரு ஒப்பந்தத்திலும் தடைகள் இருக்கவே செய்யும். சிரமங்களை முறியடித்து, இரு தரப்பினருக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதே எங்கள் பணி; அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.” என்றார்.
மோதல் மேலும் தீவிரமடைந்தால் அது இப்பிராந்தியத்திற்கு இன்னும் அதிக இன்னல்களைக் கொண்டுவரும் என்று கூறிய அவர், ஈரானிடமிருந்து ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான போதிலும், அமைதியான தீர்வைக் காணவே கத்தார் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
