கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை களைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுவிக்கக் கோரியும் மகா சங்கத்தினரை முன்னிலைப்படுத்திய பாதயாத்திரை இன்று (10) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பமானது.
பாதயாத்திரை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, கண்டி மகுல் மடுவ பகுதியில் விசேட ஆசீர்வாத நிகழ்வும் இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த உலப்பனே சுமங்கல தேரர், தற்போதைய அரசாங்கத்தினால் ஞானசார தேரருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் வாரியப்பொல ஸ்ரீ சுமங்கல தேரர் தேசத்தினதும் பௌத்த சாசனத்தினதும் பாதுகாப்புக்காகக் குரல் கொடுத்ததைப் போன்று, ஞானசார தேரரும் நாடு, தேசம் மற்றும் சாசனத்தின் அபிவிருத்திக்காகக் குரல் எழுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.
ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டது அவரது தனிப்பட்ட விடயம் மட்டுமல்ல எனத் தெரிவித்த அவர், அவரைத் தனிமைப்படுத்தாமல் நிபந்தனையின்றி ஆதரிப்பது அனைவரினதும் கடமை என வலியுறுத்தினார்.
ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பாதயாத்திரை, ஞானசார தேரர் சிறைவைக்கப்பட்டுள்ள இடம் வரை செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு விடுதலை கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் கைவிடப்பட மாட்டாது எனத் தெரிவித்த உலப்பனே சுமங்கல தேரர், நிலவும் அடக்குமுறைகளுக்கு எதிராக வன்முறையற்ற முறையில் முன்னெடுக்கப்படும் இந்தப் பாதயாத்திரையில் பொதுமக்களும் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
