சர்வதேச விசாரணை கோரி நவம்பர் 16 இல் செம்மணியில் பெரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே சங்கத்தின் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டனர்.

செம்மணி மனிதப் புதைகுழியில் 110 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 583 மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர் ராஜ் சோமதேவா எந்தவித முறையான மரபணுப் பரிசோதனைகளோ அல்லது தடயவியல் ஆய்வுகளோ இன்றியும், அதனை ஒரு மனிதப் புதைகுழி எனக் குறிப்பிடாமலும் நீதிமன்றத்துக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பித்துள்ளதை ஏற்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் கொக்குத்தொடுவாய் மற்றும் சதொ ச மனிதப் புதைகுழி விவகாரங்கள் மூடப்பட்டது போன்று செம்மணியும் மூடப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், இதில் சர்வதேச நிபுணர்கள் மற்றும் தடயவியலாளர்களின் நேரடிப் பங்களிப்புடன் மரபணுப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இனப்படுகொலையின் மிகப்பெரிய சாட்சியாக விளங்கும் செம்மணி மனிதப் புதைகுழிக்கு உரிய சர்வதேச நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குச் செம்மணிப் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குச் சர்வதேச நீதி கோரும் இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுதிரண்டு ஆதரவு வழங்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles