கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை இன்று (15) முதல் மீள ஆரம்பம்

Colombo (News 1st) அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (15) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

இதற்கமைய, கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் M.J.இந்திபொலகே தெரிவித்தார்.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப்பணிகளால், ஜனவரி  5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை –  காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.

எனினும், வவுனியா முதல் காங்கேசன்துறை வரையிலான யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 27 ஆம் திகதி முதல் அது ஓமந்தை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில்,  வடக்கு ரயில் மார்க்கத்தில் புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் தொடக்கம் ஓமந்தை வரையான பகுதி நேற்று முன்தினம் (13) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதற்கமைய,  கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் இன்று முதல் வழமையான நேர அட்டவணைக்கு அமைய முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய உற்சவத்தை முன்னிட்டு விசேட சுற்றுலா ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை இந்த ரயில் சேவையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 06 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்தும் நாளாந்தம் இரவு 10 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ள இந்த சொகுசு கடுகதி ரயில், காலை 6 மணிக்கு கொழும்பை வந்தடையவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles