ஐஸ் கிரீமில் மனித விரல், பூரான், துவங்கி உணவில் இறந்து கிடந்த பாம்பு, பிளேடு என இந்தியாவில் உணவுத்துறை சார்ந்த அலட்சிய சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில், தற்போது சாக்லேட் சிரப் புதிதாக இணைந்துள்ளது.
பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான செப்டோவில் குடும்பத்தார் ஆர்டர் செய்து வாங்கிய சாக்லேட் சிரப்-இல் எலி இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாக்லெட் சிரப்-ஐ வாங்கிய குடும்பத்தார், இது தொடர்பான தகவலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
அதில், சாக்லெட் சிரப்-ஐ தனது குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உட்கொண்டதாகவும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பிரவுனி கேக்-இல் சிரப்-ஐ ஊற்ற முற்படும் போது சாக்லெட் சிரப் வழக்கத்தை விட தடிமனாக இருந்ததையும், அதில் முடி இருந்ததையும் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து பாட்டிலை முழுமையாக காலி செய்த போது, அதில் எலி ஒன்று இறந்து கிடந்தது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக ஹெர்ஷிஸ் நிறுவனத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாருக்கு பதில் அளித்த ஹெர்ஷிஸ், “இந்த சம்பவத்திற்கு மன்னித்து விடுங்கள். தயவு செய்து UPC மற்றும் பாட்டிலில் உள்ள உற்பத்தி குறியீட்டை எங்களது நுகர்வோர் குறைதீர்ப்பு சேவைக்கு அனுப்பி வையுங்கள். எங்களது குழுவை சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவலாம்,” என்று தெரிவித்தது.