டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என இந்திய சினிமாவில் பன்முகத் தன்மையுடன் இயங்கி வரும் பிரபுதேவா, ஏ.எல்.விஜய் இயக்கிய தேவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன் சங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் ஏஆர் ரகுமானின் துள்ளலான இசைக்கு காலேஜ் ஸ்டூடென்ட்டாக நடித்த பிரபுதேவாவின் ஸ்டைலான நடன அசைவுகள் பாடல்களை பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடிக்கச் செய்தது.
இந்த படத்துக்கு பிறகு பிரபு மாஸ்டர் – ஏஆர்ஆர் காம்பினேஷன் அமையாதா என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் Behindwoods தயாரிப்பில் அந்நிறுவனத்தின் CEO மனோஜ் NS இயக்கும் படத்தில் பிரபுதேவாவும், ரகுமானும் இணைந்துள்ளனர். ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தின் பெயர் குறித்த அபேடேட்டுக்கு ரசிகர்கள் தவம் கிடந்த நிலையில் படத்துக்கு ‘மூன் வாக்’ என்று பெயரிட்டுள்ளதாக Behindwoods நிறுவனம் டைட்டில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் அந்த போஸ்டரில் சிரியுங்கள், பாடுங்கள், உடன் சேர்ந்து நடனமாடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு 2025-ல் பான்-இந்திய படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.