Thursday, December 26, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
Homeஎரிபொருள் விநியோகத்தில் பாரிய மோசடி..!

எரிபொருள் விநியோகத்தில் பாரிய மோசடி..!

எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு சுமார் 31,021 மில்லியன் ரூபா மேலதிக தரகு பணமாக செலுத்தப்பட்டமையினால் பொதுமக்களுக்கு எரிபொருளுக்கான மேலதிகச் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் அறிக்கை மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் அழைத்த போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் செலுத்திய இந்த கட்டணத்தால் தற்போது ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டருக்காக 05 ரூபாய் 85 சதமும், ஒக்டேன் 95 பெற்றோல் லீட்டருக்காக 07 ரூபாய் 50 சதமும், ஒட்டோ டீசல் லீட்டருக்காக 05 ரூபாய் 80 சதமும், சூப்பர் டீசல் லீற்றருக்காக 06 ரூபாய் 96 சதம் பணமும் மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை பிரிவால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கான சுற்றறிக்கையை 08 வருடங்களுக்கும் மேலாக வழங்குவதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததன் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 3,416 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்படி கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவான மோசடி செய்துள்ளமை தொடர்பில் விற்பனை பிரிவு பொறுப்பு கூற வேண்டும் எனவும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.

கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய கோப் குழுவின் உறுப்பினர்கள், இந்த மோசடிகளுக்கு கூட்டுத்தாபனத்தின் உள்ளக அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும் என சுட்டிக்காட்டியது.

இது தொடர்பில் கூட்டுத்தாபனம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் வந்திருந்த அதிகாரிகளிடம் கோப் குழு கேள்வி எழுப்பியது.

இதன்படி, மோசடியில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியல் மற்றும் அந்த அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்து கூட்டுத்தாபனம் எடுத்த நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை 7 நாட்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோப் குழு பரிந்துரை செய்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments