வாய் பேச முடியாதவர்கள் வாழும் கிராமம்..!

குறைந்த வசதிகளுக்கு மத்தியில் வாழும் வாய் பேச முடியாத செவித்திறன் அற்ற விசேட தேவையுடைய மக்கள் வாழும் கிராமம் தொடர்பான செய்தி ஒன்று அனுராதபுரத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

இக்கிராமமானது திரப்பனய பிரதேச செயலகப் பிரிவில் அனுராதபுரம், இல. 553 மிவெல்லேவ கிராம சேவை பிரிவில் அமைந்துள்ளது.

தினிப்பிட்டிகம என்றழைக்கப்படும் இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன, இதில் 15 குடும்பங்கள் பிறக்கும்போதே வாய் பேச முடியாத மற்றும் செவித்திறன் அற்ற விசேட தேவையுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிரமங்களுக்கு மத்தியில் வசிக்கும் இவர்களின் கிராமத்திற்குள் செல்ல சரியான வீதி இல்லாத பின்னணியில், வெளியூர்களில் இருந்து வரும் லொரிகளில் குடிநீரை அக்கிராமவாசிகள் பெறுகின்றனர்.

மேலும் பெரும்பாலான வீடுகள் களிமண் அல்லது தகர கூரைகளால் கட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகும் இக்கிராமத்தில் வசிப்பவர்கள் கூலித்தொழில், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

குறைந்த வசதிகளின் கீழ் வசிப்பவர்களுக்கு விசேட தேவையுடையவர்களுக்கு உதவித்தொகையாக 5,000 ரூபாய் அரசாங்கத்திடம் இருந்து பெற உரிமை உண்டு.

ஆனால், அந்தத் தொகை வாழ்வாதாரத்துக்குப் போதாததால், கூலி வேலை தேடிச் சென்றாலும், விசேட தேவையுடைய இவர்களுக்கு கூலி வேலைகளும் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வப்போது கூலி வேலை செய்து சம்பாதிக்கும் சொற்பத் தொகை, வாழ்க்கை நடத்தவோ, குழந்தைகளின் கல்வியைத் தொடரவோ போதாது என்கின்றனர்.

இக்கிராமத்தில் குளிப்பதற்கு அன்றாட நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏரி உள்ள போதிலும் அதுவும் வறண்டு காணப்படுவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கோடீஸ்வரர் ஒருவரால், இக்கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் மோட்டார் பழுதடைந்து, தண்ணீர் வடிகட்டியும் பழுதடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles