“சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும்” – ட்ரம்ப் முன்னிலையில் ஜி ஜின்பிங் 

சீனாவும் அமெரிக்காவும் போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மூன்று நாள் பயணமாக நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று அவர், அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்தார். பெய்ஜிங்கில் உள்ள மக்கள் பேரவையில் (Great Hall of the People) இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்றுப் பேசிய ஜி ஜின்பிங், “ஒரு நூற்றாண்டில் காணப்படாத அளவிலான மாற்றங்கள் உலகம் முழுவதும் வேகமெடுத்து வருகின்றன. சர்வதேச சூழல் நிலையற்றதாகவும் கொந்தளிப்பு நிறைந்ததாகவும் உள்ளது.

சீனாவும் அமெரிக்காவும் தற்போதைய நிலையைக் கடந்து, வல்லரசு நாடுகளின் உறவுகளுக்கு ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்க முடியமா? இரு நாடுகளும் இணைந்து உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு உலகுக்கு பெரும் ஸ்திரத்தன்மையை வழங்க முடியுமா? இரு நாட்டு மக்களின் நலன் மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நமது இரு தரப்பு உறவுகளுக்கு ஒரு பொன்னான எதிர்காலத்தை நாம் இணைந்து கட்டமைக்க முடியமா ஆகிய கேள்விகள் வரலாறு, உலகம் மற்றும் மக்களுக்கு மிகவும் முக்கியமானவையாக உள்ளன.

இவை வல்லரசு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இணைந்து பதிலளிக்க வேண்டிய இக்காலத்தின் மிக முக்கிய கேள்விகளாகும். சீன – அமெரிக்க உறவுகள் எனும் பிரம்மாண்ட கப்பலின் திசையை நிர்ணயித்து, அதைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இதன்மூலம், 2026-ம் ஆண்டை சீனா – அமெரிக்கா உறவுகளில் ஒரு புதிய அத்தியாத்தைத் தொடங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆண்டாக மாற்ற முடியும்.

நாம் இந்த உறவைச் செயல்பட வைக்க வேண்டும். ஒருபோதும் சீர்குலைக்கக்கூடாது. சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மக்கள் மிகவும் மகத்தான மக்கள். சீனா தனது முழக்கமான மாபெரும் புத்தெழுச்சியை அடைவதும், அமெரிக்காவின் முழக்கமான அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக மாற்றுவோம் என்பதும் இரண்டும் கைகோத்துச் செல்ல முடியும். நாம் ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவலாம். ஒட்டுமொத்த உலகின் நல்வாழ்வை மேம்படுத்தலாம்.

மோதலைக் காட்டிலும் ஒத்துழைப்பே சிறந்தது. ஒத்துழைப்பால் இரு நாடுகளும் ஆதாயமடையும். மோதலா, இருதரப்பும் இழப்பைச் சந்திக்கும். நமது இரு நாடுகளும் போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும். இந்த உறவு முன்னேற வேண்டுமா என்பதற்கு பரஸ்பர மரியாதை முக்கியமானது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய டொனால்டு ட்ரம்ப், “சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவம். ஜி ஜின்பிங் ஒரு சிறந்த தலைவர். சீனா ஒரு சிறந்த நாடு. ஜி ஜின்பிங் மீதும் சீன மக்கள் மீதும் நான் அளவற்ற மரியாதை வைத்துள்ளேன். தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், கருத்து வேறுபாடுகளை முறையாகக் கையாளவும் இரு தரப்பு உறவுகளை முன்னெப்போதையும்விட சிறப்பாக மாற்றவும் ஒரு அற்புதமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கவும் ஜி ஜின்பிங்குடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்.

அமெரிக்காவும் சீனாவும் உலகின் மிக முக்கியமான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளாக உள்ளன. இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து இரு நாடுகளுக்கும் ஒட்டுமொத்த உலக்குக்கும் பெரிய மற்றும் நன்மையான காரியங்களை நிறைய செய்ய முடிம். அமெரிக்க வணிகச் சமூக பிரதிநிதிகள் சீனாவுடனான தங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும்.

ஆக்கப்பூர்வமான அமெரிக்க – சீன உறவை உருவாக்க வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அவரது இனிமையான இந்த கருத்தை நான் ஏற்கிறேன். செப்டம்பர் 24ம் தேதி வெள்ளை மாளிகைக்கு வருமாறு நான் அவரை அழைக்கிறேன்.

அமெரிக்க மற்றும் சீன மக்களுக்கு இடையேயான உறவு, அமெரிக்கா நிறுவப்பட்ட காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. சீனாவுக்கான முதல் அமெரிக்கத் தூதரான சாமுவேல் ஷா, 1784-ம் ஆண்டு சீன கரையை அடைந்த முதல் அமெரிக்க வர்த்தக கப்பலில் வந்தார். இரண்டரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அந்த முதல் இணைப்பு உலக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

இரு நாடுகளும் கடின உழைப்பு, துணிச்சல், சாதனை ஆகிய விழுமியங்களை பகிர்ந்து கொள்கின்றன. நாம் இருவரும் ஒன்றிணைந்து கைகோத்து நிற்கும்போது, இந்த உலகம் ஒரு தனித்துவமான இடமாக திகழ்கிறது” என தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ள சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா, ‘மத்திய கிழக்கு நிலவரம், உக்ரைன் நெருக்கடி, கொரிய தீபகற்பத்தின் நிலை உள்ளிட்ட முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இந்த ஆண்டு APEC பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தையும் G20 உச்சிமாநாட்டையும் நடத்துவதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்’ என தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles