நுவரெலியா தபால் நிலையம், அங்கிருக்கும் சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பாவனைக்காக மாத்திரம் பாதுகாக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
130 வருடங்கள் பழமை வாய்ந்த நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே 130 வருடங்கள் பழமை வாய்ந்த நுவரெலியா தபால் நிலைய கட்டடம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் இடை நிறுத்தப்படுவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
150 ஆவது சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு மாத்திரமே தபால் நிலையம், கட்டிடம் மற்றும் அதன் வளாகம் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கத்தின் கீழ் நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை தனியாரிடம் கையளிக்கும் நடவடிக்கை தொடர்பில் அண்மைக்காலமாக அதிகளவில் கலந்துரையாடப்பட்டது.
கட்டிடக்கலைக்கு புகழ்பெற்றதும் நாட்டின் முக்கிய சுற்றுலா நிலையமாக விளக்கும் இந்த கட்டடத்தை கையளிக்கும் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.