சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் இப்போது பரவலாக மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழ்நாட்டில் கிட்டதட்ட அனைத்து பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாகச் சென்னை புறநகர்ப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெயில் காலம் முடிந்து பருவமழை தொடங்கியது முதலே கணிசமாக நல்ல மழை பெய்து வருகிறது. இடையில் சில காலம் மழை சற்று ஓய்ந்து இருந்த நிலையில், இப்போது மீண்டும் மழை ஆரம்பித்துவிட்டது.
கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் மக்கள்: அதாவது இரவு 10 மணி வரை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய சென்னை புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை இருக்கு: மேலும், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கலாம் என்றும் சில இடங்களில் டிராபிக் பாதிப்பும் ஏற்படலாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.