2028 ஆம் ஆண்டு கடனை மீளச் செலுத்தும் நடவடிக்கையில் கடனை மீளச் செலுத்தக்கூடிய பொருளாதாரத்தை யாரால் அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை மக்கள் ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கம்பஹா, கிரிந்திவெலவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு ஐக்கிய மக்கள் சக்தியிடம் சிறந்த தீர்வு காணப்படுகிறது. அதற்குத் தேவையான திறமையான அணி என்னிடம் இருக்கிறது.
வறுமை, வேலையில்லா பிரச்சினை, மக்களின் சிரமமான வாழ்க்கை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகள் தேவை. அவற்றுக்கான பதில்களை வழங்கும் போது, நாட்டைப் பற்றி சிந்தித்து, அதற்கு முன்னுரிமை அளித்து, தற்போதைய சூழ்நிலையில், நாம் தொடர வேண்டும். தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
அரசியல் கருத்துகளை புறந்தள்ளிவிட்டு நாட்டுக்கும் மக்களுக்கும் பலம் தரும் வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும். அதற்கான முயற்சியை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்க தயாராக இருக்கிறது.
2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்துவதற்கு போதுமான கையிருப்பை வைத்திருக்க வேண்டும். கடனை மீளச் செலுத்துவதற்கான கையிருப்பு தானாக உருவாகாது. அதற்காக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
நமது நாடு சிறிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது. இந்தப் பொருளாதாரம் விரிவடையும் போது, நாடு அந்நியச் செலாவணியை பெறும். அதன் மூலம் கடனை செலுத்த முடியும்.