இந்திய சுற்றுப்பயணத்திற்கான நியூசிலாந்தின் டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பென் சியர்ஸ் முழங்கால் காயம் காரணமாக தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத மற்றும் அனுபவம் குறைந்த ஜேக்கப் டஃபி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
“இலங்கையில் சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரின் போது பயிற்சியின் போது சியர்ஸ் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் அவர் சோதனை செய்யப்பட்டதாக நேற்று காலை நியூசிலாந்து கிரிக்கெட் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவ ஆலோசனைக்கு அமைய அவர் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயத்திற்கு சிறந்த சிகிச்சை மற்றும் திட்டம் உரிய நேரத்தில் அறிவுறுத்தப்படும்.”
முதல் டெஸ்ட் போட்டிக்கான சரியான நேரத்தில் டஃபி இந்தியாவை அடையாத காரணத்தினால், டிம் சவுத்தி, மாட் ஹென்றி மற்றும் வில் ஓ’ரூர்க் ஆகியோர் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக செயற்படவுள்ளனர்.
முன்னணி சுழல் பந்து வீச்சாளராக அஜாஸ் படேல் செயற்படுவார் எனவும் சகலதுறை வீரர்களான மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திர, மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் க்ளென் பிலிப்ஸின் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்களாக செயற்படுவார்கள்.
தேவைப்பட்டால் டேரில் மிட்செலின் வேகப்பந்து வீச்சு சேவையையும் நியூசிலாந்து அணி பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான ஜேக்கப் டஃபி இதுவரை ஆறு ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 299 முதல் தர விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கை அணியுடன் அண்மையில் நிறைவடைந்த டெஸ்ட் தொடரின்போது நியூசிலாந்து நட்சத்திர துடுப்பாட்ட வீரரான கேன் வில்லியம்சனுக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இந்த காயம் குணமடையாத காரணத்தால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வில்லியம்ஸன் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.