இதுவரை வெளியிடப்படாத ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை நாளை காலை 10 மணிக்கு முன்னதாக ஜனாதிபதி வெளியிட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குறித்த காலக்கெடுவுக்குள் ஜனாதிபதி அதனை வெளியிடாவிடின், தாம் அந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்த அவர், தம்மைக் கைது செய்வதற்கான திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரச இரகசியங்களை வெளிப்படுத்திய குற்றத்துக்காக தமக்கு 14 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என ஜனாதிபதி சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக உதய கம்மன்பில இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மக்களின் உண்மையை அறியும் உரிமையைச் சர்வாதிகாரத்தினால் தடுத்து நிறுத்த முடியாது.
தாம் சிறையில் அடைக்கப்பட்டாலும், அங்கிருந்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் குறித்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான அறிக்கை தம்மால் வெளியிடப்படும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.