அமெரிக்கத் தூதரகம் அறிக்கை விடுவதற்கு முன்னரே, தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் கிடைத்திருக்குமாயின் அதிகாரிகள் ஏன்? பாதுகாப்பைப் பலப்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
தமது எக்ஸ் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ள அவர், கடந்த 7ஆம் திகதியே இது தொடர்பான தகவல் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்ததாகப் பதில் காவல்துறைமா அதிபர் கூறியுள்ளமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாடுகள் தங்களது நாட்டுப் பிரஜைகளுக்கான அறிவுறுத்தல்களை வழங்கும் வரை எந்தவொரு சுற்றுலாத்தலத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இராஜதந்திர அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தவறியமை வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோன்று பெறப்பட்ட தகவல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அச்சுறுத்தலைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரிப்பதற்கும் அரசாங்கம் தவறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பு மீதான அச்சுறுத்தலை ஒருபோதும் இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் சுற்றுலா வருமானம் நாட்டின் மிக முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றெனவும் முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது பதிவில் கூறியுள்ளார்.