அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸின் தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவும் இணைந்துள்ளார்.
தமது முதலாவது பிரசார உரையில் டொனால்ட் ட்ரம்பினால் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் வாக்களிக்குமாறு அவர் அமெரிக்கர்களை வலியுறுத்தினார்.
கமலா ஹரிஸை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய அமெரிக்க வாக்காளர்கள் தவறும் பட்சத்தில், அதனால் ஏற்படப்போகும் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கத் தேர்தல்களில் முக்கிய பங்களிப்பை வழங்கும் மாநிலமான மிச்சிகனிலேயே இந்த பிரசார கூட்டம் இடம்பெற்றது.
இதேவேளை, அதே மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் டொனால்ட் ட்ரம்பும் உரையாற்றியுள்ளார்.
அமெரிக்க வாகன தொழில் உற்பத்தி நடவடிக்கைகளில் புதிய பிரமாணத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.
அரேபிய-அமெரிக்கர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடியுள்ளார்.
அமெரிக்கத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கமலா ஹரிஸ் குறுகிய முன்னிலையில் உள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இரு தரப்பினருமே அதிக வாக்காளர்களைக் கவரும் நோக்கில் மிச்சிக்கன் மாநிலத்தில் கடுமையான போட்டியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில் 2.28 சதவீத என்ற மிகச்சிறிய வாக்கு வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் தசம் 23 சதவீதம் என்ற மிகக் குறுகிய வித்தியாசத்தில் ஹிலரி கிளின்டனைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.