பேங்கில் கேஷியராக வேலை பார்த்து, மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்கிறார் பாஸ்கர் குமார். குடும்ப சூழல், கடன் நெருக்கடியால் முதல் முறையாக பாஸ்கர் நேர்மை தவறும் சூழல் உருவாகிறது.
அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் கண்ட ஏற்ற இறக்கங்கள், சவால்களை எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் கதை.
படம் பற்றிய அலசல்
தனுஷ் நடித்து வெளியான ‘வாத்தி’ படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
பாஸ்கராக வரும் துல்கர் சல்மான் நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார். குடும்ப பொறுப்புகளை சுமக்கும்போது அப்பாவியாக இருக்கும் அவர், ஒரு கட்டத்தில் வாழ்வில் உயரும்போது பணக்கார தோரணைக்கு மாறுவது அடடே சொல்ல வைக்கிறது.
காட்சிக்கு காட்சிக்கு விறுவிறுப்பை கொடுத்து, திரையைவிட்டு நகர விடாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளார் இயக்குநர்.
படத்தின் பெரும்பாலான வசனங்கள் கைத்தட்டலை பெறுகின்றன. மீனாட்சி சௌத்ரி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராம்கியும், சாய்குமாரும் தங்களது கதாபாத்திரத்திற்கு நடிப்பின் மூலம் வலுசேர்த்துள்ளனர்.
1989 முதல் 1992 ஆம் ஆண்டுவரயிலான காலகட்டத்தில் கதை நடப்பதும், அதற்கு ஏற்றாற்போல் காட்சியமைப்புகள் இருப்பதும் நம்மை 30 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்கிறது.
பேங்க்கில் மோசடி, ஸ்டாக் மார்க்கெட் போன்ற காட்சிகள் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கின்றன. துல்கர் சல்மான் போடும் திட்டங்கள், அவை வெளிப்படும் விதம் எல்லாமே நம்மை ஈர்க்கின்றன.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை படம் முழுவதும் விறுவிறுப்பாக செல்ல உதவுகிறது. அதேபோல் இரண்டு பாடல்களும் கேட்கும் ரகம்.
க்ளாப்ஸ்
துல்கர் சல்மானின் நடிப்பு
விறுவிறுப்பான திரைக்கதை
சுவாரஸ்யமான காட்சிகள்
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் குடும்பத்துடன் சேர்ந்து ஜாலியாக பார்த்து ரசிக்கலாம் இந்த “லக்கி பாஸ்கர்”-ஐ.