முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் பலத்தின் ஊடாகவே மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றத்திற்கு வருவார் என சட்டத்தரணி பிரேம்நாத்.சீ. தொலவத்த வலியுறுத்தியுள்ளார்.
இன்னும் சில நாட்களில், நாட்டின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட பொதுமக்கள், வரிசையில் நிற்க முடியாத மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை தேடி வந்து, அவருக்கு விருப்பம் இல்லை எனினும் கூட நாட்டை பொறுப்பேற்குமாறும், நாட்டை பாதுகாக்கவும், இராஜதந்திரமாக ஆளுமாறும் கோருவார்கள் எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
“பொதுமக்களால் வரிசையில் நிற்க முடியாது. மக்களால் கஷ்டப்பட முடியாது. நாடு மந்தமான நிலையில் செல்வதை மக்கள் அவதானிக்கிறார்கள். ” என தெரிவித்துள்ளார்.
எனினும், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் அரசியலுக்கு வரப் போவதில்லை என்றும் மீள நாடாளுமன்றத்திற்கு வருமாறு அழைப்புவிடுத்தால், அது தனது எதிரி எனவும் பகிரங்கமாக கூறியுள்ள நிலையில் அவர் எப்படி மீள நாடாளுமன்றத்திற்கு வருவார் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்,
“அவர் அவருடைய எதிர்ப்பார்ப்பை கூறுகிறார். நாட்டின் ஜனாதிபதியாக இருந்த அவர் மீள நாடாளுமன்றத்துக்கு வர எதிர்ப்பார்க்கவில்லை.
அவருடைய தேவை ஓய்வு காலத்திலேயே இருக்க வேண்டும் என்பதே. அவர் விட்டுக்கொடுக்க தயாராக உள்ளார். எனினும், தயவு செய்து நாட்டை மீள பொறுப்பேற்குமாறு மக்கள் கூறினால், மாற்றம் எதுவும் இல்லை என மக்கள் கருதினால், மக்களுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லை என்றால் அல்லது அது தொடர்பான பிரச்சனை என்றால், தங்கள் பாதுகாப்பிற்காக, மக்கள் ரணில் மீண்டும் வர வேண்டுமென அழைப்பு விடுப்பார்கள்” என அவர் தெரிவித்தார்.