போலியான ஆவணங்கள் மூலம் பெண்ணை இத்தாலிக்கு அழைத்து செல்ல முயன்ற நபர் ஒருவர் விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
கொழும்பில் இருந்து கட்டார் ஏர்வேஸின் QR 655 விமானத்தில் டோஹா வழியாக இத்தாலியின் Malpensa நகரத்திற்கு செல்வதற்காக இந்த ஜோடி வருகைத்தந்திருந்ததாக விமான மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் ஆவணங்களை சோதனையிட்டபோது, அந்தப் பெண்ணிடம் கடவுச்சீட்டு மற்றும் இத்தாலிய நிரந்தர குடியுரிமை விசா அட்டை உள்ளிட்ட வேறொருவரின் பயண ஆவணங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
விசாரணையின் போது, தன்னுடன் வந்த நபர் தன்னை இத்தாலிக்கு அழைத்துச் செல்லவிருந்ததாகவும், அதற்காக 3.6 மில்லியன் ரூபாவை குருநாகலில் உள்ள பயண முகவர் ஒருவரிடம் செலுத்தியதாகவும் பெண் ஒப்புக்கொண்டார்.
சம்பவம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.