கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) போலி நுழைவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸுக்கு (France) தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவன் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் (Jaffna), வல்வெட்டித்துறை பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன் ஆவார்.
குறித்த இளைஞன் நேற்றைய தினம் இரவு 08.35 மணியளவில் இந்தியாவின் சென்னை நகரை நோக்கிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலியாகத் தயாரிக்கப்பட்ட பிரான்ஸ் நுழைவுச்சீட்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரான இளைஞன் இந்த போலி நுழைவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல தயாராக இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.