அறுகம்பே பகுதிக்கு அமெரிக்கா பிரஜைகள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டு இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி அறுகம்பே பிரதேசம் உள்ளிட்ட நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகள் மறு அறிவித்தல் வரை அறுகம்பேக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
அமெரிக்க தூதகரம் அறுகம்பேவுக்கு செல்ல பயணத்தடை விதித்துள்ளதாக பரவலாக செய்திகள் வெளியானதன் பிரகாரம், பயணக் கட்டுப்பாடு மாத்திரமே விதிக்கப்பட்டதாகவும் பயணத் தடை எதனையும் அமெரிக்க பிரஜைகளுக்கு விதிக்கவில்லை எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமரிக்க தூதரகம் வழங்கியுள்ள பயண ஆலோசனையை மீள பெற வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்க தூதரகத்திடம் நேற்று செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன் பிரகாரம் இன்று குறித்த பயண கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.